அக்குபஞ்சர் பிரபலமானது :
நவீன அக்குபஞ்சர் மருத்துவம் உலகம் முழுக்கத் தற்போது பிரபலமாக இருப்பதற்குச் சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோதான் காரணம். 1949-ல் கம்யூனிசப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே சீனா போன்ற பரந்த, மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டின் ஆரோக்கியப் பிரச்சினைகளை மேற்கத்திய மருத்துவர்களால் மட்டும் தீர்க்கமுடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருந்தார். அக்காலத்தில் சீனாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 5-ல் 1 ஆக இருந்தது. ஆயிரம் பேருக்கு 30 பேர் வீதம் ஆண்டுதோறும் இறந்துகொண்டிருந்தனர்.
ஊட்டச்சத்தின்மை, தொற்றுநோய்கள், நவீன மருத்துவர்கள் கேள்விப்பட்டிராத மர்ம நோய்கள், மலேரியா, பிளேக், அம்மை நோய்கள், காசநோய் எனப் பலவிதமான நோய்கள் சீனாவை உலுக்கிவந்த வேளை அது. 50 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவை வெறுமனே 20 ஆயிரம் அலோபதி மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்திருந்தார் மாவோ.
சீனாவில் சிதறிக்கிடந்த பாரம்பரிய மருத்துவ முறைகளையும் பாரம்பரிய மருத்துவர்களையும் ஒருங்கிணைக்க அவர் கொண்டு வந்த திட்டம்தான் பேர்ஃபுட் டாக்டர்ஸ். இதன் மூலம் ஐந்து லட்சம் பாரம்பரிய மருத்துவர்களை அவர் ஒருங்கிணைத்தார்.
மேற்கத்திய மருத்துவத்தையும் புறக்கணிக்காமல் சீன மருத்துவத்தை இணைத்தார். அத்துடன், அக்குபஞ்சர் மற்றும் மூலிகை மருத்துவக் குறிப்புகளைப் பாரம்பரிய மருத்துவர்களை வைத்து எழுதச் சொல்லி ஆவணப்படுத்தினார். 1949-ல் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற சீனரான ஷூ லியான் என்பவரால் நவீன அக்குபஞ்சர் நூல் எழுதப்பட்டது. அதுதான் இன்றைய மருத்துவர்களுக்கு அக்குபஞ்சர் கையேடாக உதவுகிறது.
உடனடி நிவாரணம் :
அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அலுவல் பயணமாக 1971-ல் சீனாவுக்கு வருகை தந்தபோதுதான் அமெரிக்காவுக்கு அக்குபஞ்சர் அறிமுகம் ஆனது.
அவரது பயணம் குறித்துச் செய்தி சேகரிப்பதற்காக நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜேம்ஸ் ரெஸ்டன் உடன் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே குடல்வால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சீனாவுக்கு வந்து இறங்கியதிலிருந்து அவருக்கு வயிற்று வலி இருந்துவந்தது. என்னென்னவோ செய்துபார்த்தார்கள். நிவாரணம் கிடைக்கவில்லை.
சீன ஜனாதிபதி மாவோவின் தனி மருத்துவர் ஒரு மூங்கிலை வேகமாகச் சீவி, அவரது உடலில் ஒரு குத்து குத்தினார். குத்தின இடத்தில் வலி இருந்தாலும், அந்தப் பத்திரிகையாளருக்கு வயிற்றுவலி போய்விட்டது. அமெரிக்கா திரும்பிய பிறகு ஜேம்ஸ் ரெஸ்டன், அக்குபஞ்சர் பற்றி எழுதிய கட்டுரை மேற்குலகில் அக்குபஞ்சர் மறுஅறிமுகம் ஆவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது.
ஆறாயிரம் ஆண்டு வரலாறு :
அக்குபஞ்சர், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சீனாவில் நடைமுறையில் இருந்துவருகிறது. நைஜிங் (Neijing) என்பதுதான் சீனப் பாரம்பரிய அக்குபஞ்சர் மருத்துவத்தின் ஆதார நூல். அதன் அர்த்தம் உள்ளோடும் உயிர்சக்தி. அந்த நூலின் வயது 5,000 வருடங்கள். ஹங்டி என்ற மன்னருக்கும், ச்சி போ (Qi Bo) என்ற மந்திரிக்கும் இடையே நடந்த உரையாடல்களின் தொகுப்புதான் இப்புத்தகம்.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், கால, தேச, வர்த்தமானங்களைத் தாண்டி இன்னும் நிரூபிக்கப்பட்ட மருத்துவத் தீர்வுகளை விளக்கும் அக்குபஞ்சரின் பிரதான நூல் இது. உடலின் ஒரு இடத்தில் குத்தினால் குறிப்பிட்ட வலி அகன்றுவிடும் என்று அந்நூலில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள், இன்றும் விளைவைத் தருவதாக இருக்கின்றன.
மரபு மருத்துவ முறைகளைப் பற்றி ஆராய்வதற்காக, உலகச் சுகாதார நிறுவனம் 1967-ல் அல்மா அட்டா (Alma Ata) அறிவிப்பு என்ற ஒன்றை வெளியிட்டது. அப்போது எல்லா நாடுகளுடைய சுகாதார அமைச்சர்களையும் அழைத்துப் பேசினார்கள்.
நடைமுறையில் உள்ள மருத்துவ முறையின் போதாமைகள், தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் குறித்து அந்தக் கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தந்த நாட்டில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆய்வு செய்யக் கோரியது. அதன்படி உலகப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாக அக்குபஞ்சர் மருத்துவத்தை உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.