சரம் என்றால் தொடர், அல்லது அசைவு என்பது பொருள். இந்த உலகில் காணப்படும் பொருட்கள் இரண்டு வகை. ஒன்று சரம் மற்றொன்று அசரம். இதையே சேதனம், அசேதனம் என்றும் கூறுவார்கள். உயிரினங்கள் உயிர் இருக்கும் வரைத் தொடர்ந்து செய்வது சுவாசம் மட்டுமே. அதனால்தான் சுவாசத்தையும் சரம் என்று கூறுவார்கள். அண்டம் என்றால் முட்டை. முட்டை வடிவ அண்டங்களில் அசையும், அசையா பொருட்கள் இருப்பதினாலும், சுவாசிக்கின்ற மற்றும் சுவாசிக்காத வஸ்துகள் இருப்பதினாலும் இது அண்ட சராசரம் என்று வழங்கப்படுகிறது. இந்த சர சாஸ்திரத்தை சிவ பெருமான் பார்வதி தேவிக்குச் சொல்லி, பார்வதி தேவி நந்திக்குச் சொல்லி, நந்திதேவர் அகத்தியருக்குச் சொல்லி, அகஸ்தியர் தம் சீடர்கள் மூலமாக குரு பரம்பரையாக இரகசியமாக உபதேசிக்கப்பட்டு வருகிறது என்பர்.
இப்பொழுது இது ஞான சர நூல் என்ற புத்தகமாக வெளி வந்து விட்டது. மாட்டிற்கு மூக்கணாங் கயிறு போல இரு வினைகளின் கர்மாவிற்கேற்ப மனிதரைக் கட்டுப்படுத்த வல்லது சரம். அதாவது மூச்சு. மூச்சுதான் மனிதனின் ஆயுளைத் தீர்மானிக்கிறது. வாழும் பொழுது ஆரோக்கயமான வாழ்க்கைக்கும் இதுவே அடிப்படையாக அமைகிறது. சர சாஸ்திரம் அறிந்தவர் மரணத்தையும் கணிக்க முடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. நமது இடது பக்க நாசியில் வரும் சுவாசம் இடகலை என்கிற சந்திர கலையாகும். வலது பக்க நாசியில் வரும் சுவாசம் பிங்கலை என்கிற சூரிய கலையாகும். இவை இரண்டும் சேர்ந்து நடுவில் ஓடுவது சுழுமுனை என்கிற அக்னி கலையாகும். இதில் சந்திரனே அமுதமாகும். சூரியன் எல்லா இடமும் வியாபித்திருப்பவன். கொடிய அக்னி ஆகிய சுழு முனையோ எல்லா கருமங்களையும் கொல்லும்.
சந்திரன் பெண். சூரியன் ஆண். ஒரு பிரயாணம் மேற் கொள்ளும் போது சந்திர கலையில் ஆரம்பித்து, சூரிய கலையில் அந்த இடத்திற்குப் போய்ச் சேருமாறு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் செல்லும் காரியம் சிறக்கும். சந்திர கலையில் சுவாசம் நடக்கும்போது தூது அனுப்புதல், தூது போதல், புத்தாடை அணிதல். பொன் ஆபரணங்கள் பூணுதல். வேலைக்கு ஆள் அமர்த்துவது, கிணறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகள் வெட்டுதல். தாலி கட்டுவது, வீடு கட்டுவது. வீடு வாங்குவது. குடி புகுவது. பொருட்களை விற்பது. அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவகாரங்களைக் கவனிப்பது, தெய்வ வழிபாடு. பரிகாரங்கள் செய்வது. தெய்வ பிரதிட்டை செய்வது. வித்தை கற்பது போன்ற இவை எல்லா காரியங்களும் நன்மை தரும்.
வலது நாசியில் சரம் ஓடும் பொழுது குருவினடம் உபதேசம் பெறுதல். உபதேசம் செய்தல். வித்தைகளைக் கற்றுக் கொடுத்தல். போர். பயிர் விளைவித்தல். வியாபாரம். திருடுதல். சூதாடுதல். கடினமான வழக்காடுதல். உபதேசக் கருத்துகளை எழுதுதல். சங்கீதம். சொற்பொழிவு ஆற்றல். பகை உண்டாக்கல். கோள் சொல்லுதல். பங்கம் ஏற்படுத்துதல். பேயோட்டுதல். மந்திர ஜெப சாதனைகள். மருந்து சாப்பிடுதல். உறங்குதல். குளித்தல். கொல்லுதற்குரிய ஏவல் நிவர்த்தி செய்தல். கொடிய நோய் தீர்த்தல். தம்பனம் சம்பந்தமான யோகங்கள் செய்தல் போன்ற காரியங்களைச் செய்யலாம்.
சுழுமுனையில் சரம் ஓடுகையில் சமாதி யோகம் பயிற்சி செய்தல் நன்மை தரும். நினைத்த காரியங்கள் ஒன்றும் நடக்காது. தீய காரியங்கள் கை கூடும். சரம் ஓடும் பக்கம் பூரணம் என்றும் ஓடாத பக்கம் சூனியம் என்றும் கொள்க. நாம் பூரணத்தில் நின்று கொண்டு நம்மிடம் வழக்கு பேசுபவரகளை, தர்க்கம் செய்பவர்களை சூனியத்தில் நிறுத்தி வென்று விடலாம். தெற்கும் மேற்கும் சந்திரனின் திசைகளாகும். இந்த திசைகளில் பிரயாணம் போக வேண்டும் என்றால் இடகலையில் சரம் ஓடும் பொழுது செல்ல வேண்டும். அப்பொழுது பிங்கலையில் சரம் ஓடினால் சுவாசத்தை நன்றாக இழுத்து கும்பகம் செய்த படி வலது காலை மூன்று அடி வைத்து பின் சாதாரணமாக சிறிது தொலைவு நிற்காமல் செல்ல வேண்டும். இது பரிகாரமாகும்.
வடக்கும், கிழக்கும் சூரியனின் திசைகளாகும். இந்த திசைகளில் பிரயாணம் போக வேண்டும் என்றால் சூரிய கலையில் சுவாசம் நடக்கும் பொழுது செல்ல வேண்டும். அவ்வாறல்லாமல் இடகலையில் சுவாசம் நடக்குமாயின் சுவாசத்தை நன்றாக உள்ளிழுத்து கும்பகம் செய்து இடது காலை இரண்டடி எடுத்து வைத்து பின் சாதாரணமாக சிறிது தூரம் நடக்க வேண்டும். இது பரிகாரமாகும். இப்படிச் செய்தால் காரியம் நிறைவேறும். மாறாக இடகலையில் சரம் ஓடும் போது வடக்கு கிழக்கு திசைகளிற்கு பிரயாணம் சென்றால், செல்கின்ற இடத்தில் தேவையற்ற வீண் பிரச்சனைகள் ஏற்படும். திரும்பி வருவது சந்தேகம் என்று சொல்லப்பட்டுள்ளது. பிங்கலையில் சரம் ஓடும் பொழுது தெற்கு, மேற்கு திசைகளில் பிரயாணம் மேற் கொண்டால் புயலினாலும், நீரினாலும் மரணம் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்த கலை ஓடுகிறதோ அந்த காலை முன் வைத்து பிரயாணத்தைத் தொடர வேண்டும். சென்ற இடத்தில் காரியத் தடை ஏற்பட்டால் நான்கு முறை மூச்சை நன்றாக இழுத்து விட்டால், தடைகள் நீங்கும்.
பொதுவாக நாம் இடது பக்கமாகத் தூங்கினால், வலது பக்க நுரையீரல் நமக்குப் பெரிதாக இருப்பதால், நிறைய பிராண வாயு கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆனால், ஒருவர் இரவு முழுவதும் அவ்வாறு தூங்கினால், அவருக்கு இரவு முழுவதும் சூரிய கலை ஓடும். இதனால் உடலில் உஷ்ணம் அதிகமாகும். பித்த சம்மந்தமான நோய்கள் ஏற்படும். இடது காலில் வலி ஏற்படும். அது போல இரவு முழுவதும் வலது பக்கமாகப் படுத்து உறங்கினால் அவருக்கு இரவு முழுவதும் சந்திர கலை ஓடும். இதனால் உடல் அதிகக் குளிர்ச்சியடைந்து வாதம் சம்மந்தமான நோய்கள் ஏற்படும். மூக்கடைப்பு ஏற்படும். வலது கால் வலிக்கும். தூக்கத்தில் இதெல்லாம் நமக்குத் தெரியாது என்பதால்தான், நம் உள்ளுணர்வு உறங்காமல் இருந்து நம் சுவாசத்தை மாற்றி அமைத்தோ அல்லது, நம்மை புரண்டு படுக்க வைத்தோ நம்மைக் காப்பாற்றுகிறது.
மூச்சுக் காற்றின் இரகசியங்கள் தெரிந்தால் நம் உடலை நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். குறி சொல்கிறவர்கள் இந்த சரத்தை அடிப்படையாக வைத்து வருகிறவர்களின் பிரச்சனையைக் கண்டு கொள்வார்கள். மணி, மந்திர. ஔஷதம் என்கிற மூன்று கலைகளிலும் ஒருவர் சிறக்க வேண்டுமென்றால், அவருக்கு சர சாஸ்திரம் கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டும். ”சரமறிந்தவனுடன் சரசமாடாதே” என்ற சொல் வழக்கு உண்டு. சரசாஸ்திரம் சித்தியாக ஒருவருக்கு முன் ஜென்ம புண்ணியம் வேண்டும் என்று சொல்லி மறைத்து வைத்த காலம் மலையேறி விட்டது. இப்பொழுது அனைத்து புத்தகக் கடைகளிலும் இந்த சாஸ்திரம் பற்றிய புத்தகம் கிடைக்கிறது. கற்று உணர்ந்து கடைபிடித்து வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று, சீரோங்கி வாழ்வீர்களாக.